இந்தியாவின் பிரபலமான விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதில் நடிகர் மாதவன் ஜி.டி.நாயுடுவாக நடிக்கிறார். இந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இவை மாதவன் நடித்த நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படம் ‘ராக்கெட்டரி’யை தயாரித்த நிறுவனங்களாகும். இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசராக அரவிந்த் கமலநாதன் பணியாற்றுகிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157456.jpg)
தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, ஜி.டி.நாயுடுவின் பிறந்த இடமான கோயம்புத்தூரில் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை மிகவும் உண்மைத்தன்மையுடன் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்த, ரியல் லொகேஷன்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157457.jpg)
இந்தியாவின் மேதைகள் பற்றிய பயோபிக் படங்களின் தாக்கம்:
நமது நாட்டின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய மேதைகளைப் பற்றிய தகவல்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் சிறந்த வாய்ப்பாகவும் இந்த பயோபிக் படங்கள் விளங்குகின்றன. கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கும் ‘ஜி.டி.நாயுடு – தி எடிசன் ஆப் இந்தியா’ திரைப்படத்தில், நடிகர் மாதவன் ஜி.டி.நாயுடுவாக நடிக்க உள்ளார்.
மாதவனின் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு:
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்து, மாதவன் தொடர்ந்து வித்தியாசமான மற்றும் செறிவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘சைத்தான்’ படங்களில் அவர் நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இப்போது, மற்றொரு அழுத்தமான கதாபாத்திரத்தில், ‘இந்தியாவின் எடிசன்’ மற்றும் ‘கோயம்புத்தூரின் வெல்த் கிரியேட்டர்’ என்று போற்றப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளார்.