ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதியாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அக்யூஸ்ட்’. இந்த திரைப்படத்தை கன்னட இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா இதில் கதாநாயகியாக நடிக்க, உதயா ஹீரோவாக நடித்துள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156244.png)
முன்னதாக, சென்னை சென்ட்ரலில் இருந்த மத்திய சிறையில் பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால், அந்த சிறை தற்போது இடிக்கப்பட்டுவிட்டதால், பெரும்பாலும் சிறைச்சாலை செட்டுகள் அமைத்து படங்களை எடுத்து வருகின்றனர். புழல் சிறையில் பாதுகாப்பு காரணமாக சினிமா படப்பிடிப்புக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளதால், அங்கு படப்பிடிப்பு நடத்துவது கடினமானதாக உள்ளது. இதனால், பெரும்பாலான படக்குழுக்கள் அங்கு செல்வதில்லை.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, ‘அக்யூஸ்ட்’ படத்திற்காக புழல் மத்திய சிறையில் உரிய அனுமதி பெற்று முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதில் உதயா, அஜ்மல், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் தொடங்கிய படப்பிடிப்பு, சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. தற்போது, சென்னைக்கு அருகே உள்ள குத்தம்பாக்கம் பகுதியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படம், “குற்றம் சாட்டப்பட்ட எல்லோருமே குற்றவாளிகள் அல்ல. கண்காணிப்பு அமைப்புகளில் ஏற்படும் தவறுகள் சில நேரங்களில் நல்லவர்களையும் பாதிக்கின்றன. சிலர் சமூகத்தால் தாதாக்களாக மாற்றப்படுகிறார்கள்” என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இப்படத்திற்காக ஒளிப்பதிவு மருதநாயகம் செய்கிறார், இசை அமைப்பு நரேன் பாலகுமாரின் பொறுப்பில் உள்ளது.