“ரங்கூன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. அவரது இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளியான படம் “அமரன்”. இப்படம் கமல்ஹாசனின் “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்”, “சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா” ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது. இப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது. மேலும், இது தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியானது.
“அமரன்” திரைப்படம், இந்திய ராணுவத்தில் பணியாற்றிய தமிழ் நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில், சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸாகவும் நடித்துள்ளனர். மேலும், பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இப்படம், உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றது. வசூலில் சாதனை படைத்த இந்த படம், ₹335 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது, சிவகார்த்திகேயனின் திரைபயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது.தற்போது, “அமரன்” திரைப்படம் வெளியான 100 நாட்களை கடந்துள்ளது. இதை நினைவுகூர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “சிப்பாய் விக்ரம் இல்லாமல் இப்படம் முழுமையடையாது” என்று தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கும், படக்குழுவிற்கும் நன்றியினை தெரிவித்து ஒரு எமோஷனல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.