தமிழ்த் திரைப்படங்களில் கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, அஜித் குமார் நடித்த ‘என்னை அறிந்தால்’, விஜய்யின் ‘தி கோட்’ ஆகிய படங்களில் நடித்து பரிசியமானவர் பார்வதி நாயர். தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், மலையாளத்தில் அதிகமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், சென்னை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் மற்றும் பார்வதி நாயர் ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. காதலித்து வந்த இவர்களுக்கு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள பார்வதி நாயர், “என் வாழ்க்கையின் ஒவ்வொரு உயர்வு, தாழ்விலும் நீங்கள் எனக்காக இருந்தீர்கள். இன்று, வாழ்நாள் முழுவதும் அன்பு, நம்பிக்கை மற்றும் உறுதியாக நிற்கும் ஆதரவிற்கு நான் ‘ஆம்’ என்று சொல்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்த பயணம் இதே மாதிரியாக இருக்காது.” எனப் பதிவிட்டுள்ளார்.
இவர்களின் திருமண விழா தொடர்பான முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. மெஹந்தி, ஹல்தி, சங்கீத் உள்ளிட்ட திருமண சம்பிரதாயங்கள் நடைபெற இருக்கின்றன. தொழிலதிபராக இருக்கும் ஆஷ்ரித் அசோக் சென்னையில் வசித்து வருவதாலும், அவரது பூர்வீகம் ஹைதராபாத் எனவும் கூறப்படுகிறது. பார்வதி கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இருவரும் திருமணத்தை சென்னையில் விமர்சையாக நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்ப, இவர்களின் திருமணம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு, கேரளாவில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.