தெலுங்குத் திரைப்படத் துறையின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக தில் ராஜு இருக்கிறார். தமிழ் நடிகர் விஜய் நடித்த “வாரிசு” படத்தையும் இவர் தயாரித்திருந்தார். தெலுங்கில், கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து படங்களை தயாரித்து, பல முறை வசூலில் சாதனை படைத்துள்ளவர்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், முன்னணி நடிகர் ராம் சரண், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஆகியோருடன் இணைந்து, சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய பான் இந்தியா படம் “கேம் சேஞ்சர்”, பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தது. ஆனால், இந்த படம் பெரிய தோல்வியாக அமைந்தது. பாக்ஸ் ஆபீஸ் தகவலின்படி, படம் 50% கூட வசூல் செய்ய முடியவில்லை. இதற்கே எதிராக, அவர் தயாரித்த மற்றொரு திரைப்படமான “சங்கராந்திகி வஸ்துனம்”, 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
“கேம் சேஞ்சர்” படத்தின் தோல்வி குறித்து தில் ராஜு கூறியதாவது: “தோல்விக்கு காரணம் பட்ஜெட் அல்ல, கதைதான். பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டத்தை விட கதைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நம்பகமான இயக்குநர்களைக் கொண்டு கனமான கதைகளை உருவாக்குவதில்தான் எங்கள் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. ஒரு படத்தில் முன்னணி நடிகர், இயக்குநர்கள் இருப்பது மட்டுமல்ல, அவர்களது கதையும் முக்கியம்.
கடந்த சில ஆண்டுகளாக, சிக்கலான பாதையில் சென்று கொண்டிருந்தோம். “சங்கராந்திகி வஸ்துனம்” படத்தின் வெற்றி, எங்களுக்கு சரியான பாதையை காட்டியுள்ளது. சிலர் வேண்டுமென்றே தவறான வசூல் விவரங்களை பரப்புகின்றனர். உண்மையான வசூலை மீடியாதான் வெளிக்கொணர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
“கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 186 கோடி எனக் கூறப்பட்டது, ஆனால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், அந்தப் படத்தின் உண்மையான வசூல் விவரங்களை தில் ராஜு வெளியிடவில்லை. தற்போது, படம் தோல்வியடைந்ததை அவர் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், “இந்தியன் 2” மற்றும் “கேம் சேஞ்சர்” ஆகிய இரண்டு தொடர் தோல்விகளை வழங்கிய இயக்குநராக ஷங்கர் மாறிவிட்டார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.