சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் சாதனை படைத்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதற்கான தயாரிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் “ப்ரோமோ ஷூட்” பணிகள் கடந்த மாதம் நடைபெற்றன.தற்போது, ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதே சமயத்தில், சன் பிக்சர்ஸ் அடுத்ததாக தயாரிக்க இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிடப்போவதாகக் குறிப்பிட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய ப்ரோமோ வீடியோ, ஜனவரி 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சென்னை, திருநெல்வேலி, கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம், பாலக்காடு மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் ப்ரோமோ வீடியோ வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.