நடிகை தீபிகா படுகோன் தற்போது ஒரு பேன் இந்தியா நடிகையாக மாறியுள்ளார். ஹிந்தி படங்களை தாண்டி, இந்தியாவின் பல மொழிகளில் உருவாகும் பேன் இந்தியா படங்களில் அவரை நடிக்க வைக்க பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் விரும்புகின்றனர். கடந்த ஆண்டில் வெளியான கல்கி 2898 கிபி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததுடன், சமீபத்தில் பூஜை போடப்பட்ட எஸ்.எஸ். ராஜமௌலி படத்திலும் தன்னை இணைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல், பல்வேறு இந்தி திரைப்படங்களிலும் தீபிகா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தீபிகா எப்போதும் தைரியமான நடிகையாக இருப்பதை தனது செயல்களால் நிரூபித்துள்ளார். தன்னிடம் வரும் விமர்சனங்களையோ அல்லது சமூகத்தில் நிகழும் முக்கியமான நிகழ்வுகளையோ நேருக்கு நேர் எதிர்கொள்வதில் அவர் தயங்குவதில்லை. குறிப்பாக, யாராவது அபத்தமான கருத்துகளை வெளியிட்டால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கவும் அவர் தயங்குவதில்லை.
இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எல் & டி நிறுவனத்தின் எஸ்.என். சுப்பரமணியன் கூறிய சில கருத்துகள் பலரின் கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. அவருடைய கருத்துக்கள், “ஒருவர் வாரத்தில் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்; ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய வைக்க முடியாததற்கு வருந்துகிறேன். மேலும், எவ்வளவு நேரம்தான் உங்கள் மனைவியுடன் இருப்பீர்கள்? என்பதுபோல இருந்தது. இந்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீபிகா படுகோன், எஸ்.என். சுப்பரமணியனின் கருத்துகளை கடுமையாக எதிர்த்து, தனது கருத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். “முக்கிய பதவிகளில் இருக்கும் நபர்கள் இப்படி அபத்தமான கருத்துகளை வெளியிடுவது அதிர்ச்சியாக இருக்கிறது. எல்லாம் மனநிலை சார்ந்தது போல இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். தீபிகாவின் இந்த பதில் பலரது கவனத்தைக் கவர்ந்ததுடன், அவருக்கு ஆதரவாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.