இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு, அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள், மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் உள்பட பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். கிளாசிக்கல் இசையில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் நோக்கத்துடன், ஏ.ஆர். ரகுமான் தனது கேஎம் இசைக் கன்சர்வேட்டரியுடன் இணைந்து ‘பாரத் மேஸ்ட்ரோ விருதுகளை’ வழங்கவுள்ளார் என்பதை அறிவித்துள்ளார்.
இதுபற்றி ஏ.ஆர். ரகுமான் கூறியதாவது, “‘பாரத் மேஸ்ட்ரோ விருதுகள்’ என்பது வெறும் விருதாக மட்டும் இல்லாமல், இது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்கால இசையை ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியாகும். இசையின் மொழியாகிய ஒலி மூலம் நம்மை ஒருங்கிணைக்கின்றதாகவும் இதனை நான் கருதுகிறேன். இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்பதோடு, இது ஒரு இசை மையத்தை உருவாக்க உதவ வேண்டும். அதனுடன், இந்த முயற்சி மூலம் இசை தொடர்பான ஆழமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,” என அவர் குறிப்பிட்டார்.
இளம் தலைமுறைக்கான வழிகாட்டியாக இருக்கும் இசை வித்வான்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளார் விருது’ வழங்கப்படும். அதேபோல், இசைத் துறையில் சாதனை புரிந்து கொண்டிருக்கும் நான்கு இளம் தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு ‘இளம் இசைக் கலைஞர்கள் ஸ்டெல்லார் விருதுகள்’ என்ற பிரிவில் விருது வழங்கப்படும். இதனுடன், அவர்களுக்கு பணப் பரிசும் அளிக்கப்பட உள்ளது. மேலும், இந்த விருது பெற்றவர்களுக்கு ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து இசைக் கச்சேரியில் பாடும் வாய்ப்பும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.