நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் செய்து கொண்டதை மையமாகக் கொண்ட ஆவணப்படத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட்டார். இந்த ஆவணப்படத்தில், விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை சேர்க்க வேண்டும் என்று நினைத்தார் நயன்தாரா. அதற்காக அந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்த தனுஷிடம் தொடர்ந்து அனுமதி கேட்டார். ஆனால், தனுஷ் அனுமதி அளிக்காமல் இழுத்து அடித்து வந்ததனால், இரண்டு ஆண்டுகள் காத்திருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், இறுதியாக அவர்களிடமிருந்த சில காட்சிகளை மட்டும் இணைத்து ஆவணப்படத்தை வெளியிட்டனர்.
இதனால் கோபமடைந்த தனுஷ், தனது அனுமதியின்றி நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்று நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார் என்ற தகவல் வெளியானது.
இந்தச் சூழலில், அந்த ஆவணப்படத்தில் சந்திரமுகி படத்தின் சில காட்சிகளையும் பயன்படுத்தியதற்காக, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவுக்கும் மற்றும் ஓடிடி தளத்திற்கும் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.