எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட பலரும் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’, ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.
விழாவில் நடிகை அதிதி ஷங்கர் பேசும் போது, “இந்த படம் எப்போது வெளியாகும் என நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். இன்னும் பத்து நாட்களில் படம் வெளியாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் விஷ்ணுவர்தனுக்காகதான் கதை கூட கேட்காமல், உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். அவரும் என்மீது முழு நம்பிக்கை வைத்தார்.
‘விருமன்’ படத்தில் முழு கதை எனக்கு முன்கூட்டியே சொன்னார்கள். ஆனால், விஷ்ணு சார் எனக்கு இரண்டு முறை மட்டுமே கதை சொன்னார். அதன் பிறகு நேரடியாக ஷூட்டிங்குக்கு சென்றுவிட்டோம். ஷூட்டிங் இடத்தில்தான் அவர் வசனங்களையும் காட்சிகளையும் எனக்கு கூறுவார். இதன் மூலம் நிறைய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
ஆகாஷின் அறிமுகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனது முதல் விருதை சிவகார்த்திகேயன் கையால் பெற்றேன், அதன்பிறகு இரண்டாவது படத்திலேயே அவருடன் இணைந்து நடித்தேன். இந்த விழாவுக்கு அவர் வந்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.