தமிழில் “சித்தா” என்ற வெற்றி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவாகி, தற்போது வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் படம் “வீர தீர சூரன் 2” ஆகும். இதில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், சித்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பிற வேலைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
இப்படம் குறித்து இயக்குநர் அருண்குமார் அளித்த பேட்டியில், வன்முறை, மன்னிப்பு, குற்றவுணர்வு ஆகியவற்றை உணர்த்தும் படம் தான் வீர தீர சூரன் 2. இதற்கு நான் புதிதாக ஒரு கதை சொல்லும் முறையை தேர்வு செய்துள்ளேன். சாதாரணமாக, ஒரு ஊரின் பின்னணியில்தான் கதை நகரும் விதமாக இருக்க வேண்டும் என எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், இந்த கதையில் அப்படி இல்லை.
கதை ஆரம்பமாகும் முன்னே கதையின் மையம் வெளிப்படுவது இல்லை. ஆரம்பத்திற்கு பிறகே அந்த ஊரும், அங்கேயுள்ள குணங்களும் வெளிப்படும். இதுவே எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது,” என்று தெரிவித்தார். மேலும், “வீர தீர சூரன் 1 கண்டிப்பாக வர வேண்டும், ஆனால் அதை தயாரிக்க தகுந்த நேரத்தை எடுக்க வேண்டும்,” என்று கூறினார்.