இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, சமுத்திரகனி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரம்மாண்டமான கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெருமளவில் தோல்வி அடைந்த நிலையில், அந்தப் படத்துக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்கள் குறித்து ஷங்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.
“இந்தியன் 2 படத்திற்கு இத்தனை எதிர்மறை விமர்சனங்கள் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. நானும் கமல் சாரும் அந்தப் படத்துக்காக செலுத்திய உழைப்பு மிகப் பெரிது. படத்தில் பணியாற்றிய அனைவரின் உழைப்பும் ரசிகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததை நான் வருத்தமாக நினைக்கிறேன். ஆனால் இதைப் பொருட்படுத்தாமல், இந்தியன் 3 திரைப்படம் வெளியானால் அது ரசிகர்களின் மனதை வெல்லும் என நம்பிக்கை உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தியன் 3 திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும்” என்ற வதந்திகள் பரவியுள்ள நிலையில், அது முழுக்க முழுக்க தவறு எனவும், இந்தியன் 3 திரைப்படம் கண்டிப்பாக தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் எனவும் ஷங்கர் உறுதியாக கூறியுள்ளார்.