மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார். மெட்ராஸ், ஜானி, தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். திரௌபதி மற்றும் மண்டேலா போன்ற படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், மாரிமுத்து, ஜெயராவ் மற்றும் ஜானகி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிகண்டன் முரளி இசையமைத்துள்ளார், மேலும் குமரன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
படத்தைப் பற்றிய தனது கருத்துகளை இயக்குநர் ஜஸ்டின் பிரபு பகிர்ந்தபோது, “பெண்களைப் பற்றி எப்போதும் குறை கூறும் இந்த சமூகத்தில், ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதை இப்படம் விவரிக்கிறது. காவல்துறையோ, அரசாங்கமோ, அல்லது தனிநபர்களோ பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பாக இருக்க முடியாத சூழலில், ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது தன்னை எப்படி துணிச்சலாக பாதுகாக்க முடியும் என்பதை இப்படம் பேசுகிறது.
சமூக பொறுப்புடன் கூடிய ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தும் விதமாக, எதார்த்தமான திரைப்படமாக இதை உருவாக்கியுள்ளோம். எதார்த்த சினிமாக்கள் மக்கள் மத்தியில் வெற்றி பெறுகின்றன, அந்த வரிசையில் இந்தப் படம் நிற்கும். நாயகன், நாயகி இருவரும் தங்களுடைய கதாபாத்திரங்களில் வாழ்ந்தது போலவே நடித்துள்ளனர். 2025 பிப்ரவரி மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.