தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், புதுச்சேரியில் உள்ள ஒரு அரசு ஓட்டலை விலைக்கு கேட்டதாக கூறப்பட்ட தகவல்கள் சமீபத்தில் வெளியாகி, புதுச்சேரி அரசு அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்தன. இதனைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் சிவனை எதிர்த்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், அரசு ஓட்டலை விலைக்கு கேட்கவில்லை என்றும், படப்பிடிப்புக்கான அனுமதி கோரவே புதுச்சேரி சென்றதாகவும் விக்னேஷ் சிவன் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.அது தொடர்பாக அவர் கூறியதாவது: ‛‛நான் தற்போது இயக்கி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் சில காட்சிகளை புதுச்சேரி விமான நிலையத்தில் படமாக்க திட்டமிட்டிருந்தேன். அதற்கான உரிய அனுமதிகளை பெறவே புதுச்சேரிக்கு சென்றேன். அங்கு புதுச்சேரி முதல் அமைச்சரும் சுற்றுலாத்துறை அமைச்சரும் என இருவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். பின்னர் என்னுடன் இருந்த உள்ளூர் மேனேஜர் ஒருவர், அவர்கள் முன்னிலையில் சில விஷயங்களை கேள்வி எழுப்பியதையே, அது எனக்காக கேட்கப்பட்டதாக தவறாக புரிந்து கொண்டு பரப்பி விட்டார்கள்.
அதனால் அரசு ஓட்டலை நான் வாங்க நினைத்ததாக கூறப்படும் மீம்ஸ்கள் வைரலாகியுள்ளது. சிலருக்கு இது வேடிக்கையாக தோன்றலாம், ஆனால் இதில் எந்தவித உண்மையும் இல்லை. மேலும், இந்த மாதிரி மீம்ஸ்கள் தேவையற்றவை என்று நான் நினைக்கிறேன். அதனால் இந்த விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.