பராரி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை இது. அங்கே வீரத் தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் ஆதிக்க சாதி மக்களும், ஒடுக்கப்பட்ட சாதி மக்களும் ஊரின் இரண்டு பக்கங்களில் வாழ்கின்றனர். இவர்கள் இருவரும் ஒரே குலதெய்வத்தை வழிபட்டாலும், அடிக்கடி சண்டையிட்டு மோதுகிறார்கள். இந்த சமூக மோதல்களின் பின்னணியில், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஹரிசங்கரின் மீது ஆதிக்க சாதியைச் சேர்ந்த சங்கீதா காதல் கொள்ளுகிறார். ஆனால், ஹரி அந்தக் காதலை ஏற்க மறுக்கிறார். இதற்குக் காரணம், இரண்டு சாதி மக்களுக்கும் இடையிலான நிரந்தர பகைமையே ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்கள், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர் பெங்களூரு சென்று ஜூஸ் பேக்டரியில் கூலி வேலை செய்கிறார்கள். அந்தப் பயணத்தில் ஹரிசங்கரும், சங்கீதாவும் உள்ளிட்ட இரண்டு சாதிக்காரர்களும் இணைந்து செல்வார்கள். அங்கு, கன்னட அமைப்பைச் சேர்ந்த புகழ் மகேந்திரனுக்கும், சங்கீதாவுக்கும் இடையில் சண்டை உருவாக, புகழை சங்கீதா அடித்து விடுகிறார். இதனால் குரூப் லீடராக இருக்கும் புகழ் ஆத்திரமடைந்து, தமிழகத்திலிருந்து வந்த கூலி தொழிலாளர்களுக்கு வேலை தரவேண்டாம் என எதிர்க்கிறார். இதற்குப் பின்னால் என்ன நடந்தது என்பதே கதைமொழியின் மீதிக் கதையின் மையம்.

படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று திருவண்ணாமலை கிராமத்தை மையமாகக் கொண்ட காட்சிகள். அங்குள்ள கதைக்களம், கதாபாத்திரங்கள், ஊர் மக்கள், அவர்களது வாழ்க்கை முறை ஆகியவை அனைத்தும் நேரில் பார்க்கும் உணர்வைத் தருகின்றன. இதேபோல் பெங்களூரு ஜூஸ் பேக்டரி தொடர்பான காட்சிகளும் இயல்பானதாகக் காணப்படுகிறது. ஆனால், இப்படியான உருவாக்கம் மட்டுமே கதையின் முழுமைக்குப் போதாது என்பதே உண்மை.
ஓர் ஒடுக்கப்பட்ட சாதி இளைஞனாக ஹரிசங்கர் நடித்திருக்கிறார். தனது சாதி மக்களுக்குத் தேவைப்படும் இடங்களில் எதிர்த்து நின்று, மற்ற நேரங்களில் அமைதியாக பின்வாங்கும் மனிதனாக அவர் நடித்த விதம் பாராட்டுதலுக்குரியது. குறிப்பாக சங்கீதா தன்னை நெருங்கி வரும் போதெல்லாம் அவரை தவிர்த்துவிட்டு விலகிச் செல்கிறார். இந்த அமைதியான முறை, அவருடைய மனநிலையை அப்படியே வெளிப்படுத்துகிறது.
சங்கீதா கல்யாண், கிராமத்து பெண்ணாக தனது கதாபாத்திரத்தில் முழுமையாக உயிர்த்திருக்கிறார். அந்தக் கிராமப் பெண்கள் அணியக்கூடிய ஆடை, நடத்தை, பேச்சு, பார்வை ஆகியவற்றை துல்லியமாக உருவாக்கி அசத்தியிருக்கிறார். அவரது இயல்பான நடிப்பு நேரில் காணும் உணர்வை வழங்குகிறது. அவருடைய இந்த முயற்சி தமிழ்சினிமாவில் ஒரு வலம் வரக்கூடிய நடிகையாக ஆக்குவதாகவே தோன்றுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், இராசாபாளையம் கிராமத்தின் சந்து, பொந்துகள், வயல் வரப்பு, காடு, மேடு ஆகியவை கதாபாத்திரங்களோடு இயல்பாக ஒத்திசைந்து செயல்படுகின்றன. ஸ்ரீதர் ஒளிப்பதிவு இதற்குச் சிறப்புச் சேர்க்கிறது. ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் சில பாடல்களும் சுவையாக இருக்கின்றன.