பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசேன் (வயது 73) உடல்நலக்குறைவால் காலமானார். ஜாகிர் உசேனுக்கு கடந்த ஒரு வாரமாக இதய சம்பந்தமான பிரச்னை ஏற்பட்டிருந்தது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 16) காலை ஜாகிர் உசேன் காலமானார். அவருடைய மறைவால் ரசிகர்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
சிறு வயதிலேயே மஹாராஷ்டிராவில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றவர். தனது சிறந்த இசை ஆக்கங்களுக்கு மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண், பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷண் போன்ற விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியது.
1951ஆம் ஆண்டில் புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்காவின் மகனாக மும்பையில் பிறந்த ஜாகிர் உசேன், மூன்றாவது வயதிலேயே தனது தந்தையால் தபேலா இசைக்கு அறிமுகமானார். அதன்பிறகு உலகம் முழுவதும் தனது தபேலா இசையால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.இந்த ஆண்டு, ஜாகிர் உசேன் பேலா ப்ளெக், எட்கர் மேயர் மற்றும் ராகேஷ் சவுராசியா ஆகியோருடன் இணைந்து பாஷ்டோவுக்கான சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சிக்கு உள்ளிட்ட மூன்று கிராமி விருதுகளை வென்று பெருமை சேர்த்தார்.