சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியீடாக உள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு, இந்தியாவின் பல்வேறு இடங்களில் பயணித்து வருகிறார் நடிகர் சூர்யா.
நடிகர் சூர்யா தொடர்ந்து பாலய்யாவின் நிகழ்ச்சியிலும், நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி, கேரளா மற்றும் கர்நாடகாவிலும் கங்குவா படத்தை பெரிய அளவில் பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கங்குவா படத்தின் கதையை பற்றிய விவரங்களை சூர்யா வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
சிறுத்தை சிவா 700 ஆண்டுகளுக்கு முந்தைய உலகத்தை உருவாக்கியுள்ளார். அப்பொழுது மூன்று தெய்வங்களை வழிபடும் மக்களிடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் யுத்தமாக மாறியது என்பதே கங்குவா படத்தின் மையக்கதையாக இருப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார். நெருப்பை கடவுளாகக் கருதி வழிபடும் கங்குவாவின் உலகம், நீரை கடவுளாகக் கொண்டாடும் மக்களின் உலகம், ரத்தத்தை கடவுளாகக் கொண்ட உதிரனின் உலகம் ஆகிய மூன்று உலகங்களுக்கிடையே ஏற்படும் மோதல்தான் கங்குவா படத்தின் கதை என அவர் கூறியுள்ளார்.