இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை கடந்துள்ளது. பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டுகிறார்கள். சென்னையில் இன்று படத்தின் வெற்றி விழா பிரம்மாண்டமாக நடந்தது, இதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசும் போது சிவகார்த்திகேயன் கூறியதாவது, “அமரன் திரைப்படத்தின் கிலிமாக்ஸ் காட்சி எனது வாழ்க்கையிலும் இடம்பெற்ற சம்பவத்தைப் போன்றது. என்னுடைய அப்பா இறந்த போது வீட்டில் அனைவரும் மனமுடைந்திருந்தனர். அப்பாவின் அஸ்தியில் இருந்த எலும்புகளை பார்த்த போது நானும் மனமுடைந்தேன்; என்ன செய்யப் போகிறேன் எனத் தெரியாமல் நின்றேன். அப்படி மனம் உடைந்த ஒருவனாக இருந்த என்னை இன்று இந்த இடத்தில் நிறுத்தியுள்ளீர்கள். இன்று நான் சிவகார்த்திகேயனாகவோ அல்லது அமரனின் கதாநாயகனாகவோ இல்லாமல், என் அப்பா ஜி. தாஸ் என்ற உண்மையான காவல் அதிகாரியின் மகனாக இங்கு நிற்கிறேன். இன்று என் அப்பா இந்த வெற்றியை பார்த்து மகிழ்வார் என நம்புகிறேன்.
படத்தின் வசூல் 150 கோடியை தாண்டியுள்ளது என கூறுகிறார்கள், அது மிகப் பெரும் மகிழ்ச்சி. தமிழ் சினிமாவிற்கு மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை வழங்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது. தமிழ் சினிமாவை உலகளவில் அனைவரும் பார்க்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு இருப்பேன். வசூலை மற்ற படங்களோடு போட்டி பார்ப்பதில்லை. சாய் பல்லவி ஒரு சிறந்த நடிகை; அவரின் நடிப்பு படம் முழுவதும் பார்வையாளர்களை ஈர்த்தது. எனது காட்சிகள் அனைத்து பார்வையாளர்களை பூரணமாக கவரவில்லை என்றால், அவர் நடிக்கும் கடைசி 10 நிமிட காட்சி பார்வையாளர்களை ஈர்த்திருக்கும். அவர் இன்னும் பல விருதுகளை பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.‘அமரன்’ சாய் பல்லவிக்கு முதல் பெரிய கமெர்ஷியல் வெற்றி பெற்ற படமாக அமைந்துள்ளது, இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உள்ளது.
கமல்ஹாசன் சார் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று உங்களுடன் கூற சொன்னார். திரைப்படம் நன்றாக போவது குறித்து அவருக்கும் பெரும் மகிழ்ச்சி.எனக்கு அமரன் திரைப்படத்தின் வெற்றி அங்கு இருந்து தொடங்கியது. அமெரிக்காவில் இருந்து அவர் திரும்பி வந்து என்னை கட்டிப்பிடிக்கும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்”