Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

‘பிரதர்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சிவா மனசல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி,’ என காமெடிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குனர் எம் ராஜேஷ். அதன்பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த சில படங்கள் ரசிகர்களுக்குத் திருப்தியான படங்களாக அமையவில்லை. ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்த ‘பிரதர்’ மூலம் களத்தில் குதித்துள்ளார்.எடுத்துக் கொண்ட கதை என்னவோ ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் ஒரு யதார்த்தமான விஷயம்தான். ஆனால், அதை இன்றைய காலத்திற்குத் தகுந்தபடி தராமல் அவருடைய அதே பழைய டிரெண்டில் கொடுத்து சோதித்திருக்கிறார்.

அச்யுத் குமார், சீதா தம்பதியிருக்கு மூத்த மகள் பூமிகா, மகன் ஜெயம் ரவி. ஊட்டி கலெக்டர் ராவ் ரமேஷ் மருமகள், ஊட்டி ஐஎப்ஆபீசர் நட்டியின் மனைவி பூமிகா. ஜெயம் ரவி வக்கீலுக்குப் படித்தாலும் பாஸ் ஆகாமல் வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். வீண் வம்புகளை இழுத்து வருகிறார். அதனால் அப்பா அச்யுத்துக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடுகிறது. இதனால், ஊட்டியிலிருந்து வரும் அக்கா பூமிகா, தன் தம்பி ஜெயம் ரவியை தன்னோடு அழைத்துச் சென்று அவனை மாற்றிக் காட்டுகிறேன் என்கிறார். ஊட்டி செல்லும் ஜெயம் ரவி, அக்கா வீட்டிலேயே குழப்பத்தை ஏற்படுத்தி, அக்கா பூமிகாவை அந்த வீட்டிலிருந்து பிரித்து அழைத்து வந்துவிடுகிறார். இதன் பின் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா, ஜெயம் ரவி மாறினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பக் காட்சிகள் சென்னையில் நடக்கும் சீரியலாகவும், பின்னர் ஊட்டியில் நடக்கும் சீரியலாகவும் இருக்கின்றன. டிராமா டைப், சீரியல் டைப் என என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், சினிமா டைப் ஆக மட்டுமே தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமா சில காட்சிகளை மட்டும் சென்டிமென்ட்டாகவும், தனது பாணியிலும் வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.ஜெயம் ரவிக்கு இதெல்லாம் டெம்ப்ளேட் டைப் கதாபாத்திரம். ஜெயம், எம் குமரன், சந்தோஷ் சுப்பிரமணியம் என அவருடைய முந்தைய கதாபாத்திரங்களின் கலந்து கட்டிய கலவை. இதில் கூடவே நிறைய நிறைய பேசுகிறார் அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி தோற்றம், நடிப்பு எல்லாம் அப்படியேதான் இருக்கிறது. இன்னும் பல அழுத்தமான, சுவாரசியமான, காதலான காட்சிகளை வைத்திருக்கலாம். எல்லாவற்றிலும் ஒன்றிரண்டுடன் முடித்துக் கொண்டுள்ளார் இயக்குனர்.

படத்தில் பிரியங்கா மோகன் இருக்கிறார், ஆனால் இல்லை என்ற மாதிரியே திரைக்கதைக்குள் எப்போது வருகிறார், எப்போது போகிறார் என்பது தெரியவில்லை. படத்தில் ஜெயம் ரவிக்கு ஒரு ஜோடி, கதாநாயகி வேண்டும் என்பதற்காக பிரியங்கா மோகன். படத்தில் இவர் மட்டுமல்ல எல்லாருமே அப்படி ஒரு ‘மேக்கப் கோட்டிங்’ போட்டிருக்கிறார்கள். ஆறுதலுக்கு ஒரு அழகான டூயட்டாவது இடம் பெற்றிருக்கலாம். ஜெயம் ரவியின் அக்காவாக பொருத்தமாகவே இருக்கிறார். ஆனால், டப்பிங்கில்தான் ‘லிப் சின்க்’ அதிகமாக இல்லை. அவர் ஏதோ பேச, டப்பிங்கில் வேறு ஏதோ பேசியிருப்பது போன்ற உணர்வு. ஏதோ கடமைக்கு ஒரு கதாபாத்திரம் போல பூமிகாவின் கணவராக நட்டி. சரண்யா பொன்வண்ணன், கிராமத்து அம்மாவாகத்தான் நம் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த எலைட் அம்மா கதாபாத்திரம் எல்லாம் செட்டாகவேயில்லை. ராவ் ரமேஷ் பணக்கார அந்தஸ்தைக் காட்டத் துடிக்கும் ஒரு கலெக்டர். ஜெயம் ரவியின் பெற்றோர்களாக அச்யுத் குமார், சீதா பாவமாக வந்து போகிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மக்காமிஷி’ பாடல் மட்டும் இளைஞர்களைக் கவரும். இன்னும் இரண்டு, மூன்று டூயட் பாடல்களாவது சூப்பராக வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான். ஊட்டி பங்களாவில் கதை நடக்கிறது, ஆனால், அதிக குளோசப்களிலேயே படத்தை போகஸ் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம். சினிமாவில் தொடர்ந்து நிலைத்து நிற்க வேண்டுமென்றால் அப்டேட் அவசியம். 2010களில் நகைச்சுவைப் படங்களுக்கென ஒரு தனி வரவேற்பைப் பெற்றவர் ராஜேஷ். அப்போதைய இளைஞர்களைக் கவரும் விதங்களில் அடுத்தடுத்து ஹிட்டுகளைக் கொடுத்தார். இப்போதைய டிரெண்டுக்கு அப்போதைய இயக்குனர்கள் மாற வேண்டியதன் அவசியத்தை இந்தப் படம் புரிய வைக்கும்.

- Advertisement -

Read more

Local News