ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் “அமரன்” எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன, அதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதால், இதன் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 18ம் தேதி சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி, சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அமரன் படத்தின் இரண்டாவது பாடலாக “வெண்ணிலவு சாரல்” தற்போது வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடலை கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கனவே “ஹே மின்னலே” பாடல் வெளியிடப்பட்டு, பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இத்திரைப்படம், தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மிக நேர்த்தியாக படமாக்க, பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில், ராணுவ வீரர்களின் பகுதிகளில் நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால், ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த படத்தை தயாரான உடன் காஷ்மீரில் உள்ள முக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பு காட்சி ஒன்றை திரையிட திட்டமிட்டுள்ளனர். மேலும், அவர்களின் புரிதலுக்காக “அமரன்” படத்தை ஹிந்தி பதிப்பில் அல்லது ஆங்கில சப்டைட்டிலுடன் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.