சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படம் 2000 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். பான் வேர்ல்டு படமாக உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படம் சரித்திரம் மற்றும் சயின்ஸ் பிக்ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை அதிகமாக வசூலித்த படங்களில், அமீர்கான் நடித்த ‘டங்கல்’ படம் மட்டும் 1900 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. அதன் பின் ‘பாகுபலி 2’ 1800 கோடி, ‘ஆர்ஆர்ஆர்’ 1300 கோடி, ‘கேஜிஎப் 2’ 1200 கோடி, ‘ஜவான்’ மற்றும் ‘பதான்’ ஆகிய படங்கள் 1100 கோடியும், ‘கல்கி 2898 ஏடி’ 1100 கோடியும் வசூலித்துள்ளன.
எந்த ஒரு தமிழ்ப் படமும் இதுவரை 1000 கோடியைத் தாண்டிய வசூலைப் பெறவில்லை. அதிகபட்சமாக ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படம் 800 கோடியைத் தாண்டி அதிக வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் 2000 கோடி வரை வசூலிக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியது ரசிகர்களிடையே ஒருவித மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.