நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் வந்து இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சினிமாவில் எந்தவித பின்னணியும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகரான அஜித்குமாருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
1993 ஆம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஜித், ஆசை, காதல் கோட்டை படங்கள் மூலம் பிரபலமானார். அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, சிட்டிசன், வில்லன், பில்லா, மங்காத்தா, விஸ்வாசம், துணிவு என பல படங்கள் சாதனை படைத்தது. இந்த நிலையில், அஜித்குமார் திரைத்துறையில் 32 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ‘விடாமுயற்சி’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த போஸ்டரில் 32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்… யாவையும் எதிர்கொண்டு வெல்லும் ‘விடாமுயற்சி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனி எழுத்து இயக்கத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.