சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கவுள்ள படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் அந்த படம் ஆரம்பிக்க படாமல் இருப்பதாக கூறுகின்றனர். அஜித்தை வைத்து அட்லீ இயக்கப் போகிறார் என்றும் யஷ் நடிக்கப் போகிறார் என்றும் ஏகப்பட்ட பேச்சுகள் உலா வரும் நிலையில், நடிகர் சூர்யா அந்த படத்தில் நடிக்கப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜவான் படத்தை ரிலீஸ் செய்து விட்டு கிட்டத்தட்ட ஒரு வருடமாக தனது அடுத்த படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் அட்லீ தவமாய் தவம் கிடந்து வருகிறார். விஜய் தொடர்ந்து நடிப்பேன் என்று சொல்லியிருந்தால், ஷாருக்கானையும் விஜய்யையும் வைத்து ஒரு சூப்பரான பான் இந்தியா படத்தை அட்லீ இந்நேரம் ஆரம்பித்திருப்பார் என்கின்றனர். ஆனால், அது நடக்கவில்லை. அல்லு அர்ஜுனும் அட்லீ படத்தில் நடிக்கப் போவதில்லை என தகவல்கள் வெளியான நிலையில், அட்லீ யாரை இயக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கங்குவா படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அந்த படத்திற்கு அனிருத் இசைஅமைக்கப் போவதாகவும் கூறுகின்றனர். அட்லீ படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உண்மை தெளிவாகும்.