நடிகர் பிரஷாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், யோகி பாபு, கார்த்திக் , சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அந்தகன் படம் நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. பாலிவுட்டின் அந்தாதுன் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிரஷாந்தின் அப்பா தியாகராஜன் அந்தகன் படத்தை எழுதி இயக்கியுள்ளார். அந்தகன் படத்தில் கண் தெரியாதவராக பிரஷாந்த் நடித்துள்ளார். திரில்லர் வகையில் இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்பதை படத்தின் ட்ரெய்லர் மூலம் அறிய முடிகிறது. அதேசமயம் பிரஷாந்திற்கு கண் தெரியுமா, தெரியாதவாறு நடிக்கிறாரா என்ற சந்தேகமும் எழுகின்றது.
சிம்ரன், பிரியா ஆனந்த் போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் கார்த்திக் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. பியானிஸ்டாக பிரஷாந்த் நடித்துள்ள நிலையில், அவர் தனது இசையால் அனைவரையும் கவர்கிறார் என்று படத்தின் ட்ரெய்லர் காட்டுகிறது. வெளியான அந்தகன் ட்ரெய்லர் ரசிகர்களிடத்தில் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.