மலையாள சினிமாவில் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வரவேற்பை பெற்று, கதையின் நாயகனாகவும் நடித்து வருபவர் ஜோசப் பட புகழ் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இவருக்கு காயம் ஏற்பட்டு, தற்போது வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் தான் நடந்து வருகிறார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது. தற்போது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சூர்யா, பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்டோர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஜோஜூ ஜார்ஜும் தற்போது இணைந்துள்ளார். கடலில் படகில் அமர்ந்திருப்பது போன்று ஒரு வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, இந்த படத்தில் தற்போது நடித்து வருவதை உறுதி செய்துள்ளார் ஜோஜூ ஜார்ஜ்.