கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 எடுத்தபோதே இந்தியன் 3 படமும் உருவாகிவிட்டது என்பதை முன்கூட்டியே இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து ஷங்கர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியன் படத்தின் மூன்றாவது பாகம் உருவாகும் என்று நானே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. இரண்டாவது பாகத்தின் கதை இந்தியா முழுக்க செல்லும்படி இருக்கும். எனது படங்களின் கதைகள் பொதுவாக பெரிதாகத்தான் இருக்கும். அதனை எடிட்டில்தான் குறைப்போம். இந்தியன் முதல் மூன்று மணி நேரம் ஓடும். அது நிஜமாகவே பெரிய கதைதான்.
இந்தியன் 2 நன்றாக வந்திருக்கிறது என்ற எண்ணம் இருக்கிறது. கதையை குறைத்து காட்சிகளின் நீளத்தை சுருக்கி கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும்போது அந்தக் காட்சிகளில் உயிரோட்டம் இருக்குமா என்ற பயம் இருந்தது. அதனை செய்து பார்த்தேன்.
அதேசமயம் எல்லா காட்சிகளுக்கும் தேவைப்படும் நீளத்தை கொடுக்க வேண்டும். சரியான நீளத்தை கொடுத்துவிட்டு இவை இரண்டு பாகங்களுக்கு பிரித்தால் சரியாக வருமா என்று சோதனை செய்து பார்த்தோம். மேலும் சின்ன சின்ன விஷயங்கள் சேர்க்கப்படும்போது இரண்டு பாகங்களாக வந்தது. இப்படித்தான் இந்தியன் 3 உருவானது” என்றார்.