நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் கல்கி 2898 AD படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, கமல் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தீபிகா படுகோன், திஷா பதானி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் மகாபாரதக் காலத்தில் ஆரம்பித்து கி.பி. 2898-ம் ஆண்டில் முடிவடைகிறது.
கிட்டத்தட்ட 6000 ஆண்டுகள் நடக்கும் கதை இது என்று கூறப்படுகிறது. விஷ்ணுவின் அவதாரமான கல்கியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.இத்திரைப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிட்டுள்ள நிலையில், படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் டிரெய்லரை சமீபத்தில் வெளியிட்டனர். இந்நிலையில் மார்வெல் ஸ்டூடியோஸ், டிஸ்னி மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஆகியோருடன் பணிபுரிந்த கான்செப்ட் இல்லஸ்ட்ரேட்டரும் வடிவமைப்பாளருமான சங் சோய், தனது கிராபிக்ஸ் வடிவமைப்பை (Art Work) `Kalki 2898 AD’ படக்குழுவினர் அனுமதி பெறாமல் பயன்படுத்தியிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சங்க சோய், 10 வருடங்களுக்கு முன்பு அவர் டிசைன் செய்த கிராபிக்ஸ் வடிவமைப்பு (Art Work), `Kalki 2898 AD’ படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். “அனுமதி எதுவும் பெறாமல் இன்னொருவரின் ஆர்ட் ஒர்க்கைப் பயன்படுத்துவது சரியான செயல் கிடையாது. இப்படிச் சட்டதிட்டங்களை மதிக்காத சூழலில் தொடர்ந்து கலைப் படைப்புகளை உருவாக்க வேண்டுமா என்று சில சமயங்களில் என்னை நானே கேள்வி கேட்டுக் கொள்கிறேன்” என்று ஆதங்கத்துடன் குற்றம் சாட்டியுள்ளார்.