குடும்பங்கள் கொண்டாடும் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமன், இப்போது தனது மகன் விஜய் கனிஷ்காவை ஹீரோவாக “ஹிட் லிஸ்ட்” படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த படத்தை, கே.எஸ். ரவிக்குமாரின் தயாரிப்பில், அவரது உதவி இயக்குனர்கள் சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இயக்கியுள்ளனர். படத்தில் சரத்குமார், கெளதம் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், அபி நக்ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, முனீஷ்காந்த், பால சரவணன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாலிவுட்டில் இதே மாதிரி படங்கள் ஏற்கனவே வந்துள்ளன. “ஸ்பைடர்” படத்தில் எஸ்.ஜே. சூர்யா மாஸ்க் மேனாக நடித்திருப்பார். “ஜவான்” படத்திலும் சில காட்சிகளில் ஷாருக்கான் அப்படியே நடித்திருப்பார். ஆனால், இங்கு கடைசி வரை மாஸ்க் மேன் யார் என்பது தான் முக்கியமான திருப்பமாக உள்ளது. அதிகம் சினிமா பார்க்கும் ரசிகர்கள் அந்த திருப்பத்தை ஸ்டார் படத்தின் கிளைமேக்ஸ் போலவே எளிதாக கணித்து விடுவார்கள். ஆனால், சாதாரண மக்களுக்கு அந்த திருப்பம் சுவாரஸ்யம் கொடுக்கும்.
படத்தில் என்ன நிறை?
இந்த படத்தின் முக்கிய பலம் சரத்குமாரின் திறமையான நடிப்பே. கதை மற்றும் திரைக்கதை சுமாராக இருந்தாலும், அவரது நடிப்பு படத்தை தாங்கி நிற்கிறது. முதல் பாதியில் அவருக்கு சண்டைக் காட்சிகள் இல்லையென்றாலும், இரண்டாம் பாதியில் அவர் நடித்த சண்டை காட்சிகள் பாராட்டைப் பெறுகின்றன. சமுத்திரகனி, கெளதம் மேனன், அபி நக்ஷத்ரா போன்ற மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்துள்ளனர். நீட் பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் ஒரு அளவுக்கு பெட்டர்தான்.
படத்தில் என்ன குறை?
படத்தில் பெரிதாக ரொமான்ஸ் மற்றும் பாடல்கள் இல்லாதது மட்டுமே ஆறுதலாக உள்ளது. ஆனால் சில இடங்களில் படத்தின் மந்தமான போக்கு, ரசிகர்களை சலிப்படையச் செய்கிறது. கிளைமேக்ஸில் மாஸ்க் மேன் யார் என்று தெரிய வரும் இடம், ரசிகர்களை எந்தளவுக்கு ஈர்க்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. விஜய் கனிஷ்காவின் இந்த படத்துக்கு ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று ஆதரவு அளிப்பார்களா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது.