நடிகர் ரஜினிகாந்த், டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடித்து வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, படக்குழுவினர் ரஜினிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி, ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், ரஜினிகாந்த் ஜூன் மாதத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.முன்னதாக ஜெயிலர் படத்தில் இருந்தது போலவே, பல்வேறு பிரபல நடிகர்கள் கூலி படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வயதிலும் ரஜினிகாந்த், தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்த வயதிலும் அவரது செயல்பாடு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் இளம் நடிகர்களுக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது. வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், மற்றும் இப்படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே கூலி படமும் ரஜினியை வித்தியாசமாக காட்டும் என்று முன்னதாக லோகேஷ் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு 260 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல லோகேஷ் கனகராஜிற்கு 60 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில் நெகட்டிவ் ஷேட் மற்றும் பாசிட்டிவ் ஷேடுடன் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்த சூழலில் தற்போது ஜூன் 6-ம் தேதி இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.