மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றுவிட்டு, நீண்ட காலமாக ஓய்வில் இருந்தார். தற்போது அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், சமந்தா ஒரு பாட்காஸ்டில் தனது திரைத்துறை பயணத்தைப் பற்றி மகிழ்ச்சியுடன் பேசினார். அவர் கூறியதாவது,எனது சிறுவயதில் எனக்கு சொகுசான வாழ்க்கை இல்லை. பல கஷ்டங்களை சந்தித்துத்தான் வளர்ந்தேன். எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில்தான் என் கவனம் முழுவதுமாக இருந்தது.
என்னைத் தன்னம்பிக்கைப்படுத்திக் கொண்டே, கடுமையாக உழைக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். 23 வயதில் திரைத்துறையில் நுழைந்தேன். அப்போது இந்தத் துறை பற்றி எனக்கு முழுமையான அறிவு இல்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டுமே என் மனதில் இருந்தது.
திரைத்துறையில் நல்ல நிலையைப் பெற்ற பிறகு, அந்த நிலையை தக்க வைத்துக்கொள்வதற்கு மேலும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இல்லையெனில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப நேரிடும் என்ற பயம் என்னை வாட்டியது.
இந்தத் துறையில் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன். தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும். போராட்டமும் உழைப்பும் மட்டுமே நிலையானது என உணர்ந்தேன் என்று தனது திரைப்பயணத்தைப் பற்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.