தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட் திரையுலகிற்கும் சென்றிருக்கும் முன்னணி இயக்குநர் அட்லீ, “ராஜா ராணி” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். பின்னர், விஜய்யுடன் இணைந்து “தெறி”, “மெர்சல்”, “பிகில்” ஆகிய வெற்றிப் படங்களை வழங்கி பிரபலமடைந்தார்.

பின்னர், பாலிவுட்டில் தனது முதல் படமாக “ஜவான்” திரைப்படத்தை ஷாருக் கானை வைத்து இயக்கிய அட்லீ, ரூ.1,200 கோடி வசூல் செய்த சாதனையைப் படைத்தார். தற்போது, அவர் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் ஐந்து கதாநாயகிகள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. அட்லீயின் கதைக்களத்திற்கு ஏற்ற வகையில், அமெரிக்க மற்றும் கொரிய திரைப்படத்துறையைச் சேர்ந்த மூன்று நடிகைகளை முக்கியமான கதாபாத்திரங்களுக்காக தேர்வு செய்யவும் அவர் யோசித்து வருகிறார்.மேலும், முக்கிய கதாநாயகிகளாக ஜான்வி கபூர் மற்றும் மற்றொரு இந்திய நடிகை நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனுடன் மேலும் ஒரு நடிகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.