தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் பரத். இவர், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில், தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக ‘காதல்’ திரைப்படம் வெளியான நாளைக் குறிப்பிட்டார். அந்தப் படம்தான் தன்னை கதாநாயகனாக மக்களிடம் அறிமுகப்படுத்தியதாகவும், ஒவ்வோர் ஆண்டும் அந்த நாளை நினைவுகூர்வதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, தவறவிட்ட திரைப்பட வாய்ப்பு குறித்துப் பேசிய அவர், ‘கண்டேன் காதலை’ படப்பிடிப்பில் இருந்தபோது இயக்குநர் கே.வி.ஆனந்தின் தொலைபேசி அழைப்பை எடுக்க முடியாமல் போனதால், ‘கோ’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாகக் கூறினார். தனது திரைப்பயணத்தில் அந்தப் படத்தைத் தவறவிட்டதே மிகப்பெரிய வருத்தம் என்றும், அது தனது வாழ்க்கையில் பெரிய திருப்பமாக அமைந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
தற்போதைய சினிமா சூழல் குறித்துப் பேசிய பரத், இன்றைய படங்களில் நடனத்துக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும், இயக்குநர்கள் கதைக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும் குறிப்பிட்டார். கடைசியாக மிகப்பெரிய அளவில் நடனமாடியது விஜய் சார்தான் என நினைப்பதாகக் கூறிய அவர், ‘மண்டாடி’, ‘மொத ராத்திரி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
