Advertisement

ஆக்டோபஸ் – வெப் தொடரின் விமர்சனம்!

விழுப்புரம் மாவட்டம் ராமநகரில் உள்ள அன்பு நகர் குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்கள் தனித்தனி வீடுகளில் இருந்தாலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் போல அன்புடன் பழகி வருகின்றனர். அங்கு புதுமணத் தம்பதிகளான அஷ்வின் குமாரும் அவரது மனைவி சித்துவும் வசிக்கின்றனர். அக்கம்பக்கத்தினரிடம் அன்பாகவும் பணிவாகவும் நடந்துகொள்ளும் சித்து, அனைவரின் நன்மதிப்பையும் பெறுகிறார்.

ஒருநாள் இரவு திடீரென ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது. பதற்றத்துடன் வெளியே வரும் குடியிருப்புவாசிகள், அந்தச் சத்தம் எந்த வீட்டிலிருந்து வந்தது என விசாரிக்கின்றனர். அப்போதுதான் சித்துவை அவரது கணவர் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வருவது தெரியவருகிறது. இருப்பினும், கணவர் மீதான பாசத்தால் தனக்கு நேரும் கொடுமைகளை வெளியே சொல்லாமல் சித்து மறைத்து வாழ்கிறார்.

இதற்கிடையே, சித்து திடீரென காணாமல் போகிறார். இதுகுறித்து அவரது கணவர் அஷ்வின் குமாரிடம் குடியிருப்புவாசிகள் விசாரிக்கும்போது, அவர் எந்தப் பதற்றமும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். சித்து எங்கே சென்றார்? அவர் உயிருடன் இருக்கிறாரா? அஷ்வின் குமார் மறைக்கும் மர்மம் என்ன? என்ற கேள்விகளுக்கான விடையே மீதிக்கதை.

துடிப்பும் துணிச்சலும் கொண்ட பெண் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் அர்ச்சனா நடித்துள்ளார். தன் கண்முன்னே நடக்கும் அநீதிகளைக் கண்டு கொதிக்கும் கதாபாத்திரத்தில் உணர்ச்சிகரமான நடிப்பை வழங்கியுள்ளார். இரண்டு விதமான நடிப்பிலும் கவனம் ஈர்த்து, தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். கணவரின் கொடுமைகளைத் தனது தவறுக்குக் கிடைக்கும் தண்டனையாக நினைத்துக்கொண்டு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் சித்து கதாபாத்திரத்தில் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அஷ்வின் குமார், சைக்கோத்தனமான குணம் கொண்ட கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.

வினோத் கிஷன் – கலைவாணி பாஸ்கர் ஜோடியின் காதல் காட்சிகள் கதையின் பரபரப்புக்கு நடுவே இதமான தருணங்களாக அமைந்துள்ளன. கலைவாணி பாஸ்கருக்கு ஏற்படும் முடிவு கதையில் முக்கியமான உணர்ச்சிகரமான திருப்பமாக அமைகிறது. மர்மம் நிறைந்த கதைக்கு ஜெயசந்திர ஹாஷ்மி அமைத்துள்ள விறுவிறுப்பான திரைக்கதை, ஒவ்வொரு எபிசோடிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசையும், கண்ணா ஆரின் ஒளிப்பதிவும் தொடருக்கு வலுசேர்க்கின்றன.

Add a Comment

Leave a Reply