Advertisement

பல்லாயிரம் ஆண்டுகால மர்மம்… கவனம் ஈர்க்கும் நாக சைதன்யாவின் ‘விருஷகர்மா’ டிரெய்லர்!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விருஷகர்மா’. ‘விருபாக்ஷா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டு இப்படத்தை இயக்கியுள்ளார். புராணம், மர்மம், அமானுஷ்ய சக்திகள் என வித்தியாசமான பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புதையலைத் தேடிச் செல்லும் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடித்துள்ளார். அவரது பயணத்தின்போது 5,000 ஆண்டுகள் பழமையான மர்ம சக்தி ஒன்று மீண்டும் விழித்தெழுகிறது. மனித குலத்துக்கே அச்சுறுத்தலாக மாறும் அந்தச் சக்தியின் பின்னணியைக் கண்டறிந்து, உலகைக் காப்பாற்ற அர்ஜுன் மேற்கொள்ளும் முயற்சிகளே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளன.

பழங்காலக் குகைகள், மர்ம உருவங்கள், அமானுஷ்ய சக்திகளின் தாக்கம் எனப் பல பிரம்மாண்டமான காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இதுவரை பார்த்திராத கிராபிக்ஸ் மற்றும் காட்சியமைப்புகளுடன் இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டு இப்படத்தை உருவாக்கியிருப்பதை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். ஜெயராம், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, கியாரா கண்ணா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா வில்லனாகத் தோன்றுவது கவனம் பெற்றுள்ளது. பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரிப்பில், சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படம் உருவாகியுள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியுள்ள ‘விருஷகர்மா’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply