நடிகை பார்வதி திருவோத்து தனது வேலை மற்றும் வாழ்க்கை குறித்த அணுகுமுறையைப் பற்றிப் பேசியுள்ளார். இதுவரை ஆண்டின் சில நாட்கள் மட்டுமே பணியாற்றி வந்ததாகக் குறிப்பிட்ட அவர், இனி அதிக நாட்கள் வேலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஏடிஹெச்டி பாதிப்பு குறித்துப் பேசிய பார்வதி, “எனக்கு கவனக்குறைவு மற்றும் அதீத செயல்பாட்டுக் குறைபாடு (ADHD) இருக்கிறது. ஆனால், அதை நான் பெரிய பிரச்சினையாகப் பார்ப்பதில்லை. மற்றவர்களுக்கு இருப்பதைப் போல நேரம் எனக்குச் செயல்படுவதில்லை. எனக்கேற்றபடி நேரத்தை நீட்டித்துக்கொள்ள முடியும். அதற்காக இனி தூங்காமல் இருக்கப் போகிறேன் என்று அர்த்தமில்லை. நானும் தூங்கி எழுவேன். ஆனால், அடுத்த மூன்று ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உழைக்க முடியும்” என்றார்.
மேலும், தோல்வி குறித்துப் பேசிய அவர், “தோல்வியடைவதில் தவறில்லை; ஆனால் பெருமையுடன் தோல்வியைச் சந்தியுங்கள். உங்களைச் சிதறடிக்கும் சில விஷயங்களே வேறு வழிகளில் உங்களை மீண்டும் ஒன்றிணைக்கலாம். எனவே, முயற்சியைக் கைவிடாதீர்கள். வளர்ச்சிக்கும் உத்வேகத்துக்கும் வெளியிலிருந்து கிடைக்கும் ஊக்கத்தை எதிர்பார்ப்பது எனக்குச் சலிப்பை ஏற்படுத்தியது. நான் கடுமையாக உழைத்தேன். அதற்கான பலனாக இந்தப் பிரபஞ்சம் எனக்கு ஆசீர்வாதங்களை வழங்கியது. எதிர்பாராத சிறப்பான வாய்ப்புகளும் கிடைத்தன” என்று தெரிவித்துள்ளார்.
