Advertisement

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் ‘தாயன்’!

ஸ்காஸ்கா பிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் டாடியானா பேபன்கோ மற்றும் பிரக்ஷை பாபு இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தாயன்’. பா. சதாம் இயக்கியுள்ள இப்படம் சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. முழுக்கப் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தில், ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் பிரபலமான ராதிகா வைரவேலவன் (சாருபாலா) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ரஷ்யா, சீனா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நடிகர்களும் பங்கேற்றுள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் பா. சதாம் கூறுகையில், “தாயம் என்ற விளையாட்டைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், ‘தாயன்’ என்பதற்கு சக்திகளை உருவாக்கியவன் என்று பொருள் கொள்ளலாம். அந்தக் கதாபாத்திரத்தின் சூப்பர் நேச்சுரல் திறன்களைப் படத்தில் ரசிக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறோம். இந்த வகை மர்மத் திரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு ‘தாயன்’ நல்ல விருந்தாக இருக்கும்.

ஹாலிவுட் படங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஒன்றாகப் பணியாற்றுவதைப் பார்த்திருப்போம். அதே எண்ணத்துடன்தான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தைத் தொடங்கினோம். குறிப்பாக, ‘தாயன்’ உலகில் என்ன நடக்கிறது, அது எந்த ஊர் அல்லது எந்த மொழியைச் சார்ந்தது என்பதைக் கூட நாங்கள் வெளிப்படுத்தவில்லை. இந்தத் தகவல்கள் அனைத்தும் ரசிகர்களுக்குப் படத்தில் ஒரு த்ரில்லிங் சஸ்பென்ஸாக இருக்கும்.இப்படத்தின் திரைக்கதையை நான், சதீஷ்குமார் குளமந்தை, ராகினி கண்ணன் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ஆகிய நான்கு பேர் இணைந்து எழுதியுள்ளோம். படத்தின் பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார்” என்றார்.

Add a Comment

Leave a Reply