திருமணம் குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார் நடிகை நித்யா மேனன். சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், திருமணத்திற்கு எதிரானவர் என்ற கருத்து தவறானது என்றும், தனக்குப் பொருத்தமான ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்பதே விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.
“நான் எப்போதும் தனியாகப் பயணம் செய்பவள். திருமணத்திற்கு எதிரானவள் என்று சிலர் நினைக்கிறார்கள். எனக்கும் திருமணம் செய்துகொள்ள ஆசை இருக்கிறது. ஆனால், திருமணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு நான் ஒருவரைத் தேடவில்லை. எனக்குப் பொருத்தமான, முறையான உறவைத்தான் விரும்புகிறேன். அப்படிப்பட்ட உறவு அமையவில்லை என்றால் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், உறவில் இருவருக்கும் சுதந்திரம் அவசியம் என்றும், அகங்காரத்தின் அடிப்படையில் செயல்பட்டால் எந்த உறவும் நீடிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கைத் தேர்வுகளுக்கு ஏற்ற ஒருவரை இதுவரை சந்திக்கவில்லை என்பதால் அதைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் சிலர் மகிழ்ச்சியாகவும், சிலர் மகிழ்ச்சியின்றியும் வாழ்வதாகக் கூறிய நித்யா மேனன், காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் சிலர் விவாகரத்து செய்ய நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, எந்த வகையான திருமணம் சரி, தவறு என்று பொதுவாகத் தீர்மானிக்க முடியாது என்பதே அவரது கருத்து.
