டிசம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ள ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, அதன் நீளம் மற்றும் காட்சிகள் குறித்து இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் முக்கியமான காட்சிகள் பலவற்றை டிரெய்லரிலேயே காட்டிவிட்டதாகவும், ஏ.ஐ. மற்றும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பப் பயன்பாடு திருப்தியளிக்கவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஐதராபாத்தில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சல்மான்கான், இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.
“என்னைப் பற்றியோ எனது படத்தைப் பற்றியோ தவறாகப் பேசுவதன் மூலம் சிலர் பார்வையாளர்களையும் பின்தொடர்பவர்களையும் அதிகரித்து, புகழும் பணமும் சம்பாதிக்க முடிந்தால் அதற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு கடவுள் நல்லது செய்யட்டும். டிரெய்லர் நீளமாக இருப்பதாகவும், முழுக் கதையையும் காட்டிவிட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் முழுப் படத்தையும் காட்டவில்லை. டிசம்பர் 4-ம் தேதி முழுப் படத்தையும் பார்க்கலாம். புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடக்கூடாது என்பார்கள். ஆனால், நீங்கள் டிரெய்லரைப் பார்த்தே படத்தை மதிப்பிட்டுவிட்டீர்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், சில காட்சிகளில் சல்மான்கான் நேரடியாக நடிக்காமல் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்த விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், “இவர்கள் ஏ.ஐ. அல்லது விஎஃப்எக்ஸ் நிபுணர்களா? நான் குறிப்பிட்ட காட்சியில் நடிக்கவில்லை, வேறு ஒருவர் நடித்திருக்கிறார் என்கிறார்கள். இதையெல்லாம் நான் நேரடியாகக் கவனிக்காமல் இருக்கலாம். ஆனால், எனது குழுவினர் அனைத்தையும் கவனித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
