மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மிஷ்கின், “கீர்த்தி சுரேஷுக்கு ‘நடிகையர் திலகம்’ என்று பட்டம் கொடுக்கலாம். இனி அவரது பெயரைப் போடும்போது ‘நடிகையர் திலகம்’ கீர்த்தி சுரேஷ் என்று குறிப்பிடலாம். அந்தப் பட்டத்திற்குத் தகுதியானவர் அவர்” என்று பாராட்டினார். மேலும், அருகில் அமர்ந்திருந்த கீர்த்தி சுரேஷைத் தொட்டு தனது பாராட்டைத் தெரிவித்தார்.இந்த வீடியோவைச் சிலர் எடிட் செய்து, மிஷ்கினின் செயலைத் தவறான தொடுதல் போலச் சித்தரித்தனர். இதனால் சமூக வலைதளங்களில் மிஷ்கினுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.
இதற்குப் பதிலளித்த கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பதிவில், என் முகத்தில் உங்களுக்கு எங்கே சங்கடம் தெரிகிறது? எங்களுக்கிடையே தந்தை, மகள் போன்ற ஒரு பிணைப்பு இருக்கிறது என்று நாங்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? நீங்கள் சில விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
