துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘ஆகாசம்லோ ஒக தாரா’. பவன் சதினேனி இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. இதில் துல்கர் சல்மானுடன் சாத்விகா, ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வாசிகா, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் முன்வெளியீட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துல்கர் சல்மான், தனது அடுத்த படம் குறித்த தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், அடுத்ததாகத் தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்தப் படத்திற்கு ‘கோலி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அட்லீயிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திகேயன் வேலப்பன் இப்படத்தை இயக்குகிறார் என்றும் குறிப்பிட்டார்.
2023-ம் ஆண்டிலேயே ‘கோலி’ படம் குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன்பிறகு துல்கர் சல்மான் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது இப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளன.
