மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ஏஒடி. இப்படத்தின் மூலம் சாத்விகா வீரவல்லி கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவரது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வீடியோவை ஏற்கெனவே படக்குழு வெளியிட்டிருந்தது. மேலும், நடிகை ஸ்ருதி ஹாசனும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமாஸ் மற்றும் லைட் பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. பவன் சடிநேனி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் திரைப்படம் வெளியாகவுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, படத்தின் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ அண்மையில் வெளியானது. பாலாஜி வேணுகோபால் எழுதிய இப்பாடலை ரம்யா பெஹரா பாடியுள்ளார். ஏற்கெனவே நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
