வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் கவனம் பெற்ற அர்ஜுன் தாஸ், தற்போது கதாநாயகனாகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி பிரபலமான இவர், ‘அந்தகாரம்’ படத்தில் நாயகனாக நடித்தார். தொடர்ந்து ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் வில்லன் வேடங்களில் தோன்றினார். அதன்பிறகு ‘அநீதி’, ‘ரசவாதி’, ‘கான் சிட்டி’, ‘ஒன்ஸ்மோர்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். இந்நிலையில், மதுமிதா இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இதற்கிடையே, அர்ஜுன் தாஸை இந்தித் திரையுலகிலும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் இயக்குநர் மதுமிதா இறங்கியுள்ளார். மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘அங்கமாலி டைரீஸ்’ திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்திப் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். மேலும், படத்தில் தனது வழக்கமான தனித்துவமான குரலிலேயே இந்தி வசனங்களுக்கும் அவர் டப்பிங் பேசியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் படம் குறித்து மதுமிதா பேசுகையில், “நானும் அர்ஜுன் தாஸும் இணைந்து ஒரு இந்திப் படத்தில் பணியாற்றியுள்ளோம். மலையாளப் படமான ‘அங்கமாலி டைரீஸ்’ கதையைத் தழுவி இது உருவாகியுள்ளது. இருப்பினும், அப்படியே கதையை மீண்டும் படமாக்கவில்லை. பல மாற்றங்களைச் செய்து புதிய வடிவத்தில் உருவாக்கியிருக்கிறோம். ஒரு இயக்குநர் ஏற்கெனவே உருவாக்கிய படத்தை எந்த மாற்றமும் இல்லாமல் மீண்டும் எடுப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதனால் இதை ரீமேக் என்று சொல்ல முடியாது; தழுவல் என்றே குறிப்பிட வேண்டும். இது அர்ஜுன் தாஸின் முதல் இந்திப் படம். தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
