‘ஹார்ட் பீட்’ தொடரின் மூலம் கவனம் பெற்ற தீபா பாலு, அஜய் கார்த்தியுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். ‘ஸ்டேஷன் – ஹண்ட் ஃபார் சர்வைவல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கும் இப்படம், ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லர் கதையாக உருவாகிறது.





காதல், குற்றம், ஆக்ஷன் எனப் பல அம்சங்கள் இணைந்த கதைக்களத்தில் அஜய் கார்த்தி நாயகனாகவும், தீபா பாலு நாயகியாகவும் நடிக்கின்றனர். ‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ ஆகிய படங்களில் நடித்துள்ள அஜய் கார்த்தி இப்படத்தின் மூலம் மற்றொரு கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். கேபி இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தில் வெங்கடேஷ், தினேஷ் பிரபாகர், ரமேஷ் திலக், அனு ஸ்ரீ வேலன், சப்பானி பாய்ஸ் முரளி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அருண் ராஜ் இசையமைக்கிறார்.
படத்தின் தொடக்க விழாவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் வருகை தந்தனர். இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
