ஓடிடியில் வெளியாகும் பிருத்விராஜ் – கரீனா கபூரின் ‘தாயரா’ !

பிருத்விராஜ் சுகுமாரன், கரீனா கபூர் இணைந்து நடித்துள்ள இந்திப் படம் ‘தாயரா’. மேக்னா குல்சார் இயக்கிய இப்படம், சுமார் ரூ.50 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. இதுவரை ரூ.8 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 13-ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்கியுள்ளது. திரையரங்குகளில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், ஓடிடி வெளியீடு மூலம் கூடுதல் பார்வையாளர்களைச் சென்றடையும் வாய்ப்பு இப்படத்துக்குக் கிடைத்துள்ளது.

இந்தியாவில் நிகழ்ந்த காவல்துறை என்கவுன்டர் சம்பவங்கள் தொடர்பான சர்ச்சைகளே இப்படத்தின் கதைக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. குறிப்பாக, 2019-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற சம்பவத்தையும் இப்படம் எடுத்துக்கொண்டுள்ளது. அதேவேளையில், ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் மையப்படுத்தாமல், பல்வேறு சம்பவங்களின் தாக்கத்துடன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மேக்னா குல்சார் தெரிவித்துள்ளார்.

தற்போது இப்படம் இந்தி மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. ஜங்லி பிக்சர்ஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

Add a Comment

Leave a Reply