ராஜ் அய்யப்பா மற்றும் டெல்னா டேவிஸ் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘லவ் இங்க்’. ஆர்த்தி, ரவி மரியா, மைம் கோபி, பட்டிமன்றம் ராஜா, ரமா, சுபாஷினி, வினோத் முன்னா எனப் பலரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். மேகராஜ் தாஸ் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தை எம்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ஏ. மகேந்திரன் மற்றும் ஆதிகேசவன் வழங்குகின்றனர். படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார்.
இன்றைய காதல் உறவுகளில் தங்களுக்குப் பிடித்தவர்களின் பெயர்களையோ அல்லது காதலை வெளிப்படுத்தும் அடையாளங்களையோ உடலில் டாட்டூவாகப் பதித்துக்கொள்வது தற்போதைய தலைமுறையினரிடம் பிரபலமாக உள்ளது. இதன் மூலம் தங்களுக்கிடையேயான காதல் மேலும் அதிகரிக்கும் என்பது ஜோடிகளின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட ‘லவ் இங்க்’, சமகால உறவுகளை நகைச்சுவையுடன் அணுகும் ரோம்-காம் திரைப்படமாக உருவாகிறது.
படத்தின் கதை மற்றும் உருவாக்கம் குறித்து இயக்குநர் மேகராஜ் தாஸ் பேசுகையில், “இன்றைய தலைமுறையினரின் உறவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகிறது. நவீன காதலை நகைச்சுவை கலந்து சொல்லும் இந்தப் படத்தை இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பத்தினரும் இணைந்து பார்த்து மகிழ முடியும். இதுவரை பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த சுனில் ரெட்டி, இதில் வில்லனாகத் தோன்றுகிறார். படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. டிசம்பர் மாதம் திரைப்படம் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
