‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மு. மாறன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் பிரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, படத்தில் இணைந்த அனுபவம் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது: ‘அப்பா குட்டி’ படத்தில் பணியாற்றியது எனக்கு மனநிறைவான அனுபவமாக இருந்தது. கதையைக் கேட்டபோதே முதல் பாதி எனக்குப் பிடித்துவிட்டது. இரண்டாம் பாதியையும் கேட்ட பிறகு மறுபேச்சின்றி நடிக்க ஒப்புக்கொண்டேன். குறிப்பாக, படத்தின் இறுதிக்காட்சி மிகச் சிறப்பாக வந்துள்ளது. பாடல்களும் நல்ல உணர்வுடன் உருவாகியுள்ளன.
மு. மாறன் மிகுந்த திறமை கொண்ட இயக்குநர். குறுகிய காலத்திற்குள் படத்தைத் திட்டமிட்டு, வேகமாகவும் நேர்த்தியாகவும் முடித்துள்ளார். அவருடைய எதிர்காலப் படைப்புகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ப்ரீத்தி அஸ்ரானியைப் பொறுத்தவரை, கேமரா எந்தக் கோணத்தில் இருந்தாலும் அதற்கேற்றபடி சிறப்பாக நடிக்கிறார். தமிழ் அவருக்குத் தாய்மொழி கிடையாது என்றாலும், வசனங்களை உச்சரித்து நடித்த விதம் பாராட்டுக்குரியது. பேபி லிதன்யாவும் சிறிய வயதிலேயே அனுபவம் மிக்க நடிகையைப் போலத் தொழில்முறையுடன் நடித்துள்ளார். அவரது நடிப்பு ஆச்சரியப்படுத்தியது.
‘பிச்சைக்காரன்’ படத்திலிருந்து எனக்குத் தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. ‘பிச்சைக்காரன் 3’ படத்திற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையின்போது படத்தை வெளியிடலாம் என நம்புகிறோம்.இதற்கிடையே, ‘அயோத்தி’ படத்தை இயக்கிய மந்திரமூர்த்தி இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறேன். அதன் பணிகள் சிறப்பாக முன்னேறி வருகின்றன. இதுவரை நான் நடித்திராத முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம் அதில் கிடைத்துள்ளது. அந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும்” என்றார்.
