நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படமான ‘கிங் 100’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. நடிகை தபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு நாகார்ஜுனாவுடன் தபு இணைந்துள்ள நிலையில், இம்முறை அவருக்கு ஜோடியாக அல்லாமல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அரசியல்வாதியான மஹாந்தி ஜான்சி ராணி என்ற வலிமையான பெண் கதாபாத்திரத்தில் தபு இப்படத்தில் அறிமுகமாகிறார். அதிர்ஷ்டத்தை நம்புவதைவிட கடின உழைப்பின் மூலமே வெற்றியை அடைய வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்படும் அதிகாரமிக்க பெண்ணாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாகார்ஜுனாவின் கதாபாத்திரத்துடன் அவர் மோதும் விதம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தபுவின் பிறந்தநாளில் வெளியான இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைந்துள்ளது. வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் பின்னணி இசையும் கவனம் ஈர்க்கின்றன.ரா. கார்த்திக் இயக்கும் இப்படத்தில் சுஷ்மிதா பட், ஐஸ்வர்யா ராஜேஷ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வரும் டிசம்பர் 24-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
