இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா: பாகம் 1’. இந்திய இதிகாசமான ராமாயணத்தைத் தழுவி உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் தோன்றுகின்றனர். இவர்களுடன் ரவி துபே, ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், ஷோபனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசைப் பணிகளை ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து மேற்கொண்டுள்ளனர். பிரமாண்டமான திரைக்காட்சிகளுடன், நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
படத்தைப் பார்த்த இயக்குநர் அட்லீ, அதன் உருவாக்கத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ராமாயணா ஒரு திரைப்படம் என்பதைத் தாண்டி, மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது. அதன் கற்பனை வளமும், அந்தக் காட்சிகளைத் திரையில் கொண்டு வந்த விதமும் பிரமிக்க வைக்கின்றன. உலக அளவில் இந்திய சினிமா பெருமையுடன் உயர்ந்து நிற்பதற்கு இப்படம் ஓர் உதாரணம். நமது கலாசாரம் மற்றும் உணர்வுகளோடு ஆழமாக இணைந்திருக்கும் இந்தப் படைப்பு, பல தலைமுறைகளைக் கடந்தும் கொண்டாடப்படும் என நம்புகிறேன். எனது மகன், மகளுடன் மீண்டும் இப்படத்தைப் பார்த்து குடும்பத்தோடு மகிழ விரும்புகிறேன். மேலும், எனது தனிப்பட்ட திரைப்படச் சேகரிப்பிலும் இதனைப் பாதுகாத்து வைக்க ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
