‘சிறை’, ‘யூத்’ படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் அனிஷ்மா அனில்குமார். ஆனால், அவரது திரைப்பயணம் தொடங்கியது மலையாளத் திரைப்படமான ‘பூவன்’ மூலம். அதில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘பிரேமலு’, அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கிரிஷ் ஏ.டி. இப்படத்தைத் தயாரித்திருந்தார். இதற்கு முன்பாக ‘தண்ணீர் மாத்தன் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ ஆகிய படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.
கிரிஷ் ஏ.டி.யின் திரைப்படங்கள் மீது ஈர்ப்பு கொண்ட அனிஷ்மா, அவருடைய படங்களின் ரசிகையாகவே மாறியுள்ளார். அந்த ஆர்வத்தில்தான் ‘பூவன்’ படத்திற்கான நடிகர் தேர்வில் கலந்துகொண்டார். அதில் அவருக்குச் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போதே இயக்குநரிடம் அடுத்த படத்திலும் தனக்கு வாய்ப்பு தருமாறு கேட்க வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால், தயக்கம் காரணமாக அந்தக் கேள்வியைக் கேட்காமல் திரும்பிவிட்டாராம். பின்னர் ‘பிரேமலு’ படத்திற்குப் பிறகு கிரிஷ் ஏ.டி. இயக்கிய ‘ஐ அம் காதலன்’ படத்திற்கான கதாநாயகி தேர்விலும் பங்கேற்றுள்ளார். இந்த முறை அவரைத் தேர்வு செய்த கிரிஷ் ஏ.டி., படத்தின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார்.
தனது திரையுலக அனுபவம் குறித்து அண்மையில் பேசிய அனிஷ்மா, கிரிஷ் ஏ.டி.யின் படங்கள் மீதான தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது படங்களில் நகைச்சுவை அம்சங்கள் இயல்பாக அமைந்திருப்பதுடன், கதாபாத்திரங்களும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை ஒட்டியே உருவாக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் பார்வையாளர்கள் கதையோடு எளிதில் தங்களைப் பொருத்திக்கொள்ள முடிகிறது என்றும் இயக்குநரின் படைப்புகளை ஒரு ரசிகையாகப் பாராட்டியுள்ளார்.
