‘மூக்குத்தி அம்மன் 2’ எந்த மாதிரியான படம்? – சுந்தர்.சி பகிர்ந்த அப்டேட்ஸ்!

தீபாவளி வெளியீடாக நவம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது ‘மூக்குத்தி அம்மன் 2’. ஐசரி கணேஷ், குஷ்பு சுந்தர், நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதை குறித்துப் பேசிய இயக்குநர் சுந்தர்.சி, முதல் பாகத்துடன் இதற்குத் தொடர்பு கிடையாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். ‘மூக்குத்தி அம்மன்’ என்ற பெயர் தொடர்ந்தாலும், கதையும் அதன் அணுகுமுறையும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும், திரையரங்கிற்கு வந்து பணம் செலவழித்துப் படம் பார்க்கும் ரசிகர்கள் திருப்தியுடன் திரும்ப வேண்டும் என்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அம்மன் திரைப்படங்களின் வழக்கமான கதைக்களத்திலிருந்து மாறுபட்ட ஒரு சூழலை இப்படம் பேசுவதாகவும் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். பொதுவாக மக்களுக்குப் பிரச்சினை ஏற்படும்போது தெய்வம் தோன்றி அவர்களைக் காப்பாற்றும். ஆனால், அந்தத் தெய்வத்திற்கே ஆபத்து வந்துவிட்டால் அதை எதிர்கொள்வது எப்படி? தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலை தெய்வத்திற்கு ஏன் உருவாகிறது? அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன? இத்தகைய கேள்விகளை மையமாக வைத்தே படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். த்ரில்லர், பிரம்மாண்டம், ஆக்ஷன், பக்தி என ஒவ்வொரு கோணத்தில் அணுகினாலும் அதற்கேற்ற காட்சிகள் இருக்கும் என்றும், போர்க்களப் பகுதிகளும் கிளைமாக்ஸும் தனித்துவமான அனுபவத்தைத் தரும் என்றும் கூறியுள்ளார்.

பக்தியை மட்டுமே மையமாகக் கொண்ட படமாக இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ரசிகர்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்குப் படமாக ‘மூக்குத்தி அம்மன் 2’ இருக்கும் என்பதே இயக்குநரின் கருத்தாக உள்ளது. குறிப்பாக, பக்தியையும் ஆக்ஷனையும் இணைக்கும் கிளைமாக்ஸ் காட்சிகளை உருவாக்குவதற்காக மட்டும் ஓராண்டு காலம் பணியாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திரையரங்கில் படம் வெளியாகும்போது பார்வையாளர்களுக்குப் புதுமையான அனுபவம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply